பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி எடுத்த தீர்மானம் செல்லாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய மனுவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், சட்டமா அதிபரும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மாஅதிபராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனத்திற்கு அரசியலமைப்பு சபை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.