அரசாங்கத்தின் முடிவால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது – பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல்கள் பிற்போடப்பட வாய்ப்புள்ளது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும் என்றாலும் அதற்கு முன்னர் எல்லை நிர்ணய நடைமுறையை இறுதி செய்ய வேண்டும் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணய நடைமுறையை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணயம் முடிவுக்கு வரவில்லை என்றால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட்டாலும் தற்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய அமைச்சரவை முடிவின்படி, அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்களிடமிருந்து நேரடியாக 160 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் முறையில் திருத்தம் செய்ய தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.
மேலும் மீதமுள்ள 65 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார முறையின்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு கூறுகின்றது.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்கும் முழுமையான ஜனநாயகமான தேர்தலை அடைவதற்கும் தற்போதைய தேர்தல் முறையைத் திருத்த வேண்டியதன் அவசியத்தை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.