சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இந்த அரசாங்கத்திற்கும் இயலுமை இல்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அதில் மாற்றங்களை கொண்டுவர தம்மால் முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் கைகோர்த்து சர்வதேச நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தம் செய்து மக்களுக்கு நன்மைகளை வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும், தற்போதைய ஆட்சியாளர்களால் இந்த ஒப்பந்தத்தை மாற்ற முடியாதுள்ளது.
மாற்றங்களை மேற்கொள்வதற்கான திறன் எமக்கே உள்ளது, தேர்தல் செயல்முறை ஒரு ஜனநாயக நாட்டின் ஒரு முக்கிய அம்சம், இந்த முறைமையினால் சாதாரண மக்களின் குரல்களுக்கும் மதிப்பளிக்கப்படுகின்றது.
நாட்டை கட்டியெழுப்ப சிறந்த, வலிமையான அணியை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது. எந்த தேர்தல் வந்தாலும் இன்றும் எமது நாடு கடனை அடைக்க முடியாத நாடாகவே இருக்கின்றது.
இந்த பொதுத் தேர்தலில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை
ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது.
2028ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தங்களில் முன்னாள் ஜனாதிபதியும் அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
2033ல் இருந்து கடனை கட்டலாம், ஆனால், 2028ம் ஆண்டாக அரசாங்கம் அதனை குறைத்துள்ளது, கடனை அடைக்க, போதிய அன்னிய செலாவணி கையிருப்பு இருக்க வேண்டும்.
ஆனால், இன்று, ஒரு நாடாக, இக்கட்டான நிலையில் உள்ளோம். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, தேசிய பொருளாதார திட்டம் தேவை.
இந்த தேசிய பொருளாதார திட்டத்தில், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் தேசிய கொள்கை திட்டம் இருக்க வேண்டும். இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து, நாடும் வலுவடையும்.
இதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்தும் செயல்முறையை பலப்படுத்த முடியும்.” என சஜித் பிரேமதாச உரையாற்றினார்.