கலால் உரிமங்களை வழங்கும் செயற்பாடு அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்படவில்லை

கலால் உரிமங்களை வழங்கும் செயற்பாடு அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கைகளை முறையான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலால் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் முறையாகவே இந்த உரிமங்களை வழங்குகிறோம். நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் யாராவது உரிமம் கோரினால், முதலில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு உரிமம் கோரும்போது பிரதேச மக்களின் எதிர்ப்பு, சிவில் அமைப்புகளின் எதிர்ப்பு என்பன தொடர்பாகவும் கருத்திற் கொள்ளப்படும்.

இவற்றினை கலால் திணைக்களம் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தது. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் நாங்கள் கலால் உரிமம் வழங்கும் செயற்பாட்டினை நிறுத்தவில்லை. விதிகளை அதிகமாக அமுல்படுத்தச் சொல்லியிருப்பது மிகவும் நல்லது. நாங்கள் ஏற்கனவே அதனை பின்பற்றி வருகின்றோம்.

இதேநேரம் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையின் தேவை கருதி சுற்றுலா துறையுடன் தொடர்புடைய 1000 வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.