இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அகிப் ஜாவத் நியமனம் !

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவத் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவருக்கான டி20 உலகக் கிண்ண தொடர் முடியும் வரை இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை வென்ற போதும் அணியில்இருந்தார்.

இதன்பின்னர் பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பயிற்சியாளராகவும் ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கினை வகித்திருந்தார்.

அவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில், UAE அணி ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற அதேநேரம் 2015 இல் ICC ஆடவர் 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் விளையாடியது.

2004 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் U19 அணிக்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவத், பயிற்சியாளராக பணியாற்றினார்.