சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் பேசியிருந்த இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர், தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது குறித்த கருத்திற்கு நோயல் பிரியந்த, பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது, இலவச மின்சாரத்திற்கு மக்கள் பழகிவிட்டனர். தற்போது மாறிவரும் சூழ்நிலையில் அதைக் கையாள முடியவில்லை. ஆகையினால் பொது மக்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை.
நாங்கள் ஒன்பது ஆண்டுகளாக மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. தற்போது, ஒரே கட்டமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏன் மின்சாரம் தேவை, ஒரு எண்ணெய் விளக்கு போதுமானது” என நோயல் பிரியந்த கூறினார்.