மக்கள் ஆணையுடன் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி

வடக்கிலே 6000 ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இன்று காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வென்று விட்டது, மக்கள் ஆணை கிடைத்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும், ஆறு மாத காலத்தில் தற்போது மக்கள் ஆணை எங்களுக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி பெரு வெற்றியை பதிவுசெய்துள்ளது. வடக்கிலும் வவுனியாவை தவிர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் தமிழரசு கட்சி பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

விசேடமாக எங்கள் பகுதிகளில் ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுக்கின்றோம்.

கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிப்பை உடனடியாக மீளப் பெறவேண்டும். மக்கள் ஆணையுடன் இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம்.

அரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப் பெறாமல் இருந்தால் 29ஆம் திகதி இதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும்.