பெங்களூரு அணிக்காக விளையாட மாட்டேன் – மக்ஸ்வெல்

ஐ.பி.எல். தொடரில் மீதமுள்ள றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக எஞ்சிய போட்டிகளில் தான் விளையாடப்போவதில்லை என அவுஸ்ரேலிய வீரர் கிளெய்ன் மெக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிளெய்ன் மெக்ஸ்வெக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

கடந்த ஆறு போட்டிகளிலும் விளையாடி 32 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்த மக்ஸ்வெலுக்கு கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே நேற்றைய போட்டியில் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், மனதளவிலும் உடல் ரீதியாகவும் சிறிது ஓய்வு பெறுவதற்கு இதுவே நல்ல நேரம் என கூறியுள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியின் பின்னரே தனக்கு பதிலாக வேறு வீரரை தெரிவு செய்யுமாறு அணித்தலைவரிடமும் பயிற்சியாளரிடமும் தெரிவித்ததாக கிளெய்ன் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வில் இருந்தால் மட்டுமே மிகவும் வலுவான மனநிலையைப் பெற முடியும் என அவுஸ்ரேலிய அணியின் அதிரடி வீரர் கிளெய்ன் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு நெருக்கடியை கிளெய்ன் மெக்ஸ்வெல் எதிர்கொண்டிருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 108 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.