பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக கலந்துரையாட சம்பள நிர்ணய சபையின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று உரிய வகையில் தமது வாக்கை பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
சம்பள நிர்ணயசபை இன்று கூடிய போது 9 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்குபற்றிய போதும் தோட்ட சேவையாளர் சங்க பிரதிநிதிகளும் பெருந்தோட்டக் கம்பனிகளும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு குறித்து கடந்த ஓகஸ்ட் மாதம் முதலே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் கம்பனிகள் கூறிவரும் காரணங்கள் ஏற்புடையன அல்ல என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் கொடுப்பனவை மட்டும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை தவறான விடயம் என்றும் கூறியுள்ளார்.
இதேநேரம் நாட்சம்பள முறை நிலையான தீர்வு அல்ல என்றும் எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு பொறிமுறை அவசியம் என்றும் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.