கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் பெப்ரவரி 02 ஆம் திகதி சி,ஐ.டி.யில் முன்னிலையாகிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் சமூக ஆர்வலர்கள், சுகாதாரத் துறை தொழிற்சங்கவாதிகள் விடுத்த அழுத்தம் காரணமாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார செயலாளர், சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேநேரம் தன்னை கைது செய்தமை தவறு என்றும் இதற்காக 100 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு கோரியும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் கடந்த மாதம் 29 ஆம் திகதி அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாவது, ஏழாம், எட்டாம் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதேநேரம் ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 10, 11 ஆவது சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.