மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பரிந்துரையில் கமிந்து மெண்டிஸ்
மார்ச் மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்வதற்கான பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பட்டியலில் அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் ஆடிர், இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியிலும் மார்க் ஆடிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக அவுஸ்ரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்த மேட் ஹென்ரியும் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அவுஸ்ரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் இடம்பெற்றுள்ளார்.
மேலும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீராங்கனை மாயா பவுஷிரும் நியூசிலாந்து சகலதுறை வீராங்கனை அமெலியா கெரும் இடம்பெற்றுள்ளனர்.