சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று !

சர்வதேச நாணய நிதியதத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் மீளாய்வின் முடிவு பெரும்பாலும் சாதகமானதாக இருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு தேவையான முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் பல பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் பத்திரதாரர்களுடனான கொள்கை ரீதியான உடன்படிக்கை இறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இரண்டும் விரைவில் முடிவடையும் என்றும் அது தற்போது ஒரு பெரிய கவலை இல்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைக்காக இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு முதலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடும்.

இதன் பின்னர் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற தொடர்புடைய அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.