ஆப்கான் அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட்: இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

கடந்த 2ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 241 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 296 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை அணிக்கு 56 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த எளிய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, போட்டியின் நான்காவது நாளான இன்று விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆப்கானிஸ்தான் அணி, முதல்முறையாக இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் அபார வெற்றிபெற்று இலங்கை கிரிக்கெட் அணி சாதனைப் படைத்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக, பந்து வீச்சு சார்பில், இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தமாக 8 விக்கெட்டுகளை சாய்த்த பிரபாத் ஜெயசூரிய தெரிவுசெய்யப்பட்டார்.

டெஸ்ட் தொடரை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி, எதிர்வரும் 9ஆம் திகதி கண்டி- பல்லேகலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.