நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனத் தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கிடையில் சம அதிகாரம் பேணப்பட வேண்டும் என்ற கருத்தும் தனக்கு ஆளமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பருத்துத்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடு இருக்கும் சூழலில் நிறைவேற்று அதிகாரம் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய சூழலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேநேரம் யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிராமிய குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக போதைப்பொருள் மற்றும் கால்நடைகள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தான் எண்ணுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.