கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கில் இன்று ஒரு தரப்பிடம் மாத்திரம் விசாரணை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையிலான உத்தரவை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் இருந்து எந்த சட்டத்தரணிகளும் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையை ஒரு தரப்பினரை மட்டும் உள்ளடக்கியதாக முன்னெடுக்க நீதிபதி சந்துன் விதான தீர்மானித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மே 12 அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சியில் உள்ள மைத்திரிபால சிறிசேன தரப்பினர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் புதிய தலைவராக நியமித்திருந்தனர்.