ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என அச்சம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதையடுத்து மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளமை மத்திய கிழக்கில் பெரும் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்திய சில நாட்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்பஹான் நகரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் பல நகரங்களில் வான் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் தெஹ்ரான், இஸ்பஹான், ஷிராஸ் விமான நிலையங்கள் உட்பட பல பகுதிகளுக்கான விமான சேவைகளை ஈரான் நிறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கைகளை அடுத்து வடக்கு இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்ட போதும் அது தவறுதலாக ஒலிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

இதேநேரம் சிரியாவில் இராணுவ தளங்களை குறிவைத்து தொடர் குண்டு தாக்குதல்கள் நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ஈராக்கில், அல்-இமாம் பகுதியான பாபில் பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் சிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)