ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அதில் தாமதம் ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்த நியமனங்களை வழங்கியிருக்க வேண்டும். ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த வருட இறுதியில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்தேன்.
அதன் பிரகாரம் உடனடியாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக மேல் மாகாண சபையினால் பரீட்சை நடத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக ஏனைய மாகாணங்களில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக நேர்முகத் தேர்வு நடத்திய போது சிலர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். நீதிமன்ற நடவடிக்கைகளால், ஆசிரிய நியமனம் வழங்குவது தாமதமானது.
பாடத்துடன் இணைந்ததாகவே ஆசிரியர்களை நியமிப்பதற்காக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றும் இந்த நடைமுறையின் கீழ் ஆசிரியர் நியமனம் வழங்குகையில் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து வருகின்றனர்.
எனவே 2019ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இப்படி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மேலதிகமாக எதிர்காலத்தில் மேலும் பல நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.