இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையில், ஆனால் வறுமை உச்சத்தில் உள்ளது – உலக வங்கி

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 சதவிகித மிதமான வளர்ச்சியைக் காணும் என உலக வங்கி கணித்துள்ளது.

இருப்பினும், சமீபத்திய இரு ஆண்டுகளுக்கான வளர்ச்சி மதிப்பீட்டின்படி, நாட்டில் இன்னும் அதிக அளவு வறுமை, வருமான வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

புதிய நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் பின்னணியில் இலங்கை பணவீக்கம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக அதிகரித்த பணப்பரிவர்த்தனையும் சுற்றுலா துறையின் மீள் எழுச்சி ஆகியவையே இதற்கு காரணம் என அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக உயர்ந்து கொண்டே செல்வதாகவும் உலக வங்கி கணித்துள்ளது.

அதிக விலைகள், வருமான இழப்புகள் மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் பலவிதமான அழுத்தங்களை குடும்பங்கள் எதிர்கொள்வதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சுகாதாரத்திற்கும் கல்விக்குமான செலவினங்களை ஈடுசெய்ய கடன் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே பொருளாதார மீட்சிக்கான பாதையில் ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களும் தாக்கத்தை குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.