தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பளரையே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து தமிழ்க் கட்சிகள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அத்தகைய வேட்பாளரால் அதிகளவிலான மக்களின் ஆதரவை பெற முடியாது என்ற யதார்த்தத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்துக்கொண்டு தமிழர்களுக்கு ஏற்றவகையில் ஓர் அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளரையே தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையை அடுத்து தீர்மானம் எடுக்கப்படும் என இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
1982 முதல் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், தமிழர்கள் சார்பாக பொது வேட்பாளர் போட்டியிட்ட போதும் அவர்கள் எவரும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை கூட பெற்றுக்கொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.