பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலில் இருந்த அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மட்டுமே கொள்கலன்களின் உள்ளடக்கங்கள் தொடர்பாக கப்பல் நிறுவனம் தமக்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கீத் பெர்னார்ட் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அந்த கப்பலில் அபாயகரமான பொருட்களைக் கொண்ட கொள்கலன்கள் இருந்தால், நெறிமுறைகளின்படி அவற்றினை தனிமைப்படுத்துவோம் என்றும் அத்தகைய கொள்கலன்களை கையாள்வதற்கான நடைமுறை தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த கொள்கலன் கப்பலை நாட்டுக்கு அனுமதிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட தரப்பினராலேயே முடிவு செய்யப்படும் என இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கப்பலில் அபாயகரமான இருந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் பேசல் உடன்படிக்கையின் பிரகாரம், இவ்வாறான கழிவுகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் விபத்துக்குள்ளான டாலி என்ற கப்பல், 764 தொன் அபாயகரமான பொருள்களை இலங்கைக்கு ஏற்றுக்கொண்டு வந்தது என்றும் அவற்றில் அரிக்கும், எரியக்கூடிய பொருள்களும் வெடிபொள்களும் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.