சாணக்கியன் உள்ளிட்ட 5 பேர் கோப் குழுவில் இருந்து இராஜினாமா !!

தகுதியற்ற உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே ஆகியோரும் கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

இன்று (19) மட்டும் கோப் குழுவில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கோப் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

கோப் அறிக்கைகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஊழல் நடவடிக்கைகள் அல்லது தவறான நிர்வாகத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன முன்னதாக கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.

கடந்த அரசாங்கம் கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினரை நியமிக்கும் நடைமுறையை பின்பற்றிய போதிலும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை கோப் குழுவின் தலைவராக நியமித்தது குறித்தும் எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பினார்.

மேலும், கோப் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தனிப்பட்ட நடத்தைக்கு எதிராக, குறிப்பாக நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை சுமத்துவது அதிருப்தி அளிப்பதாகவும், இதுவும் நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 

கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவும் விலகல்