ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: நான்கு விமானங்கள் சேவையில் இல்லை – தொடரும் பிரச்சினை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான நான்கு விமானங்கள், எஞ்சின் பிரச்சினை காரணமாக தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.

எயார்லைன்ஸுக்குச் சொந்தமான எட்டு இயக்கப்படாத மற்றும் குத்தகைக்கு பெறப்பட்ட விமானங்களுக்கு 5,646.76 மில்லியன் ரூபாய் 2021 முதல் ஏப்ரல் 20, 2023 வரை செலுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

எஞ்சின் பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது என்றும் இது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு மாத்திரமன்றி உலகளவில் ஏனைய விமான சேவைகளையும் பாதிக்கும் ஒரு தொழில்துறை பிரச்சினை என்றும் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள நிலையில், அதை மறுசீரமைக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இந்த மாத தொடக்கத்தில் தனது நிலுவையில் உள்ள கடனில் 510 மில்லியன் டொலர்களை செலவிட அரசாங்கம் முடிவு செய்தது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்புக்கான விலைமனுக்களை கோருவதற்கான கால அவகாசம் மார்ச் 5 ஆம் திகதி முதல் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறுகள் உட்பட பல பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல கடுமையான தாமதங்களை எதிர்கொண்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.