வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு !!

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் திருடர்கள் கைவரிசையை கட்டிவருகின்றனர்.

அங்கு செல்லும் திருடர்கள் பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணிகள் அண்மையில் மீண்டும் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாததால் தமது காணிகள், வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு திரும்புகின்றனர்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, திருடர்கள் அப்பகுதிகளுக்குள் புகுந்து, பயன்தரு மரங்களை வெட்டுவதுடன், வீட்டில் காணப்படும் ஜன்னல், கதவுகளின் நிலைகள், இரும்புக்கம்பிகளை களவாடி செல்கின்றனர்.

திருடர்களிடம் இருந்து தமது வீடுகளையும், காணிகளுக்குள் உள்ள பொருட்களையும் ஒரு சில வாரங்களுக்கு பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.