புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியில் உள்ள மூன்று வினாக்கள் கசிந்தமை தொடர்பான பரிந்துரைகளை விரைவில் வெளியிடுவோம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கையொன்று தமக்கு கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது பரிந்துரைகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பும் என்றும் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை வினாத்தாளை திருத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் இருந்து பல கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து, மூன்று கேள்விகள் கசிந்துள்ளதை உறுதி செய்த பரீட்சைகள் திணைக்களம், அந்தக் கேள்விகளுக்கு இலவச மதிப்பெண்ணை வழங்க முடிவு செய்தது.
இதற்கிடையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் முதல் வினாத்தாளை இரத்து செய்து மீண்டும் பரீட்சையை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.