ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அடுத்தமாத இறுதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ்மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன ஆகியோரை இழப்பீடு வழங்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சம்பந்தப்பட்டவர்கள் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன் பணம் செலுத்தத் தவறினால், அவர்கள் மீது செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு அறிவித்தது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 58 மில்லியன் மட்டுமே மைத்திரிபால சிறிசேனவினால் செலுத்தப்பட்டிருப்பதாக இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் எஞ்சிய தொகைக்கான கொடுப்பனவு காலத்தை மேலும் ஆறு வருடங்கள் நீடிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் மீதி பணத்தை செலுத்தி முடிக்க ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியது.