செம்மணியில் கிரிக்கெட் மைதானம் அமைத்தால் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் – ஐங்கரநேசன் எச்சரிக்கை !!

செம்மணியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுமாயின் அருகில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணியில் சர்வதேச தரத்திலான மைதானமொன்று அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே ஐங்கரநேசன் இந்த எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.

குடாநாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் என்றும் இப்பகுதி சூழலியல் ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுப்பதாக பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மேலதிக நீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரி வழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்க செய்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது என்றும் அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும, அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த நிலையான அபிவிருத்தியாக அமையும்.

யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்றும் இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் நிறுவுவதே சிறந்தது என்றும் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *