பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை விரைவாக முடிப்பதை உறுதிப்படுத்த தோல்வியடைந்தமைக்கு ஆளும் கட்சி வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
2022 மே 09 ஆம் திகதி நிட்டம்புவவில் வைத்து அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மரணம் தொடர்பாக அரசாங்கமும் பொலிஸாரும் விசாரணையின் நிலையை விளக்க வேண்டும் இது குறித்து நாடாளுமன்றமும் ஆராய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த பல தசாப்தங்களாக நிலவிய மோதல்களின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அன்றி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக அடித்துக் கொலை செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அண்மையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்திலும் எடுத்துரைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டத்தின் பொலிஸாரும் இராணுவத்தினரும் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றும் இது குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம் எழுத்து மூலம் விளக்கம் கோரியிருந்த போதிலும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அமரகீர்த்தி அத்துகோரளயினதும் அவரது மெய்ப்பாதுகாவலரினதும் கொலைக்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படாத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்றும் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.