அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு உத்தியோகப்பூவை விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேம்சிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வொஷிங்டனில் நேற்று நடைபெற்ற உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் மத்திய ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையின் வலுவான வேலைத்திட்டங்கள், சிறந்த சீர்திருத்த நடைமுறைகளால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கென்ஜி ஒகாமுரா பாராட்டியாக ஷெகான் சேமசிங்க தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாரிய பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டியதன் அவசியத்தை கென்ஜி ஒகாமுரா வலியுறுத்தியதாக ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அதிகாரிகள் வழங்கிவரும் அர்ப்பணிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரிடம் விளக்கியதாகவும் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனையும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க சந்தித்து கலந்துரையாடினர்.
கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கையை தொடர்ந்து கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் தொடர்பாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வை இறுதி செய்வது தொடர்பாகவும் பேசியதாக ஷெகான் சேமசிங்க கூறியுள்ளார்.
இதேநேரம் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான் உலக வங்கிக்கான நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரையும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க சந்தித்து கலந்துரையாடினார்.
கடினமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியமைக்காக இலங்கை அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், உலக வங்கியில் உள்ள பல்வேறு உள்ளக மறுசீரமைப்புகள் குறித்தும் இந்த மாற்றங்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்ததாக ஷெகான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.