ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமக்கு வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய அல்லது குறைந்த விலையில் என்றாலும் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற குழுவில் பேசுவதற்கும் ஆளும் கட்சியினதும் எதிர்க் கட்சிகளினதும் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் காலங்களின் போது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் வாகனங்கள் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வரியில்லாமல் வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அவர்களால் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும், நாட்டின் பொருளாதார நிலைமைகள் காரணமாக, இந்த சலுகையை வழங்கும் நடவடிக்கை இறுதியாக 2015 இல் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 9 வருடங்களாக அந்த சலுகைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவில்லை.
வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், நாட்டின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.