தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிழக்கில் பாரியளவிலான காணி கொள்ளை இடம்பெறுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனவே பொய்களை நம்பாமல் நாட்டுக்கு எத்தகையதொரு தலைவர் தேவை என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு உதவிகளை வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, அரச மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்தங்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.
நாட்டில் நிதி மற்றும் மூலதனப் பற்றாக்குறை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இல்லாத காரணத்தால் இந்த யோசனை சரியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
தேர்தல் வருடத்தில் அரசாங்க தரப்பினர் தமது நட்பு வட்டார நண்பர்களுடன் இணைந்து, அரசாங்க-தனியார் ஒப்பந்தங்களை அமுல்படுத்தி, பாரியளவிலான காணி கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இந்த காணி கொள்ளை நடந்து வருகிறது.
இதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, பாரிய அளவில் இடம் கைப்பற்றல் நடந்து வருகிறது, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் யாரும் சிக்க வேண்டாம், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும்
நாட்டின் பணத்தை செலவழித்து உலகம் சுற்றி வரும் தலைவர்களும், சேவைகளை முன்னெடுக்க முடியாத வெறும் வாய் பேச்சு தலைவர்களும், யாராவது நல்லது செய்ய முற்படும் போது விமர்சனங்களை முன்னெடுக்கும் தலைவர்களும் தாராளமாக நாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடே வங்குரோத்தான இவ்வேளையில் சவாரி செய்யும் தலைவரும், கட்சிக்கு கிடைத்த பணத்தை செலவு செய்யும் தலைவர்களும், பொய்யான சோபன நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை தம் பக்கம் ஈர்க்கும் தலைவர்களும் உள்ளனர். நாட்டுக்கு எத்தகையதொரு தலைவர் தேவை என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.