வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் – இராஜாங்க அமைச்சர்

எதிர்காலத்தில் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாகனங்களை இறக்குமதி செய்ய படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கையிருப்பு 5 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தவணைகள் மறுசீரமைக்கப்படுவதாகவும், அதற்கேற்ப திருப்பிச் செலுத்துதல் மேற்கொள்ளப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், சுமார் 2,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்த போதும் இப்போது வாகன இறக்குமதி மட்டுமே கட்டுப்பாடு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் கையிருப்பு தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றும் இது ரூபாயின் மதிப்பு மேலும் உயர்வதற்கு வழிவகுக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.