மதவாச்சி பொலிஸாரின் அட்டூழியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதவாச்சி பொலிஸ் அதிகாரிகள் இளைஞன் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விரைவானதும் வெளிப்படையானதுமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

அந்த இளைஞன் மீது பொலிசார் நடத்திய கொடூரத் தாக்குதலின் விளைவாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் அவரது விதைப்பை ஒன்று அகற்றப்பட்டது. இதற்கு குற்றவாளிக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை மேற்கோளிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ் அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும் போது முன்னெடுக்கும் மிருகத்தனமான நடவடிக்கைகளை கண்டிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற கொடூரமான செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.