இலங்கையுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் மேலும் வலுப்படுத்தவும் இந்திய தயாராக உள்ளது என கூறியுள்ளார்.
பிற நாடுகளுடன் உள்ளதை போலல்லாமல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தனித்துவமான சகோதரத்துவம் கொண்டது என சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான எமது அணுகுமுறையானது அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கொண்டது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில், கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, அண்டை நாடு என்ற வகையில் இந்தியாவின் பொறுப்பை எடுத்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
உட்கட்டமைப்பு, ஆழமான பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம், முதலீடு, கலாசாரம், கல்வி, சுற்றுலா, உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைக்க தயார் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பிற்கு என அதிநவீன அமைப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களை இந்தியா உருவாக்குகிறது என்றும் அதனை இலங்கை போன்ற நட்புறவான பங்காளி நாடுகளுக்கும் வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.