ஈஸ்டர் தாக்குதல் குறித்த கருத்து : மைத்திரியிடம் விசாரிக்க தேவையில்லை – சரத் வீரசேகர
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை இல்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்ப்பட்ட முக்கிய சூத்திரதாரியை தனக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 வருடங்களுக்கு பின்னர் கூறியிருந்த கருத்து இலங்கையிலும் சர்வதேசத்திலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், இது குறித்து உடனடி விசாரணையை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிர் வாக்குமூலத்தை பெற்று நீதிமன்றில் உரிய சமர்ப்பணங்களைச் செய்திருந்ததுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவரை அழைக்க வேண்டிய தேவை இல்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.