50 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டுப்பணம் 31 இலட்சமாக அதிகரிப்பு …! யாருக்கு வைக்கப்பட்ட செக் ??

ஜனாதிபதித் தேர்தல் சட்டம், நாடாளுமன்றத் தேர்தல் சட்டம், மாகாண சபைத் தேர்தல் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, ஏற்புடைய வகையில் கட்டுப்பணத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதியாலும் நீதி அமைச்சரினாலும் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளரின் கட்டுப்பணம் 2.6 மில்லியன் ரூபாய் வரையும், சுயேட்சை வேட்பாளரின் தொகையை 3.1 மில்லியன் ரூபாய் வரையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியின் சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு கட்டுப்பணம் முன்னதாக 50 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேநேரம் 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளரின் கட்டுப்பணம் 11,000 ரூபாய் வரையும் சுயேட்சை வேட்பாளரின் கட்டுப்பணத்தை 16 ரூபாயாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 1988 ஆண்டின் 2 இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் கட்டுப்பணம் 6,000 ரூபாய் வரையும் சுயேட்சை வேட்பாளரின் கட்டுப்பணத்தை 11,000 ரூபாய் வரையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.