பிரிமியர் லீக்கில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது லிவர்பூல்

ஒல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகள் மோதிய கால்பந்து போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இதன் காரணமாக ஜூர்கன் க்ளோப்பின் லிவர்பூல் அணி பிரிமியர் லீக்கில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது.

இப்போட்டியின் முதல் பாதியில் லூயிஸ் டயஸ் அடித்த கோல் காரணமாக லிவர்பூர் அணி முன்னிலை பெற்றது. இதனை தொடந்து 50 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் பெர்னாண்டஸ் ஒரு கோலை புகுத்த இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

இதனை தொடந்து விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் மைனூ 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.

தொடந்து லிவர்பூல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 87 ஆவது நிமிடத்தில் மொஹமட் சலா, ஒரு கோலையும் அடித்தார். இதன் பின்னர் இரு அணிகளின் வீரர்களினாலும் கோலை புகுத்தமுடியாமல் போக போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது.

இந்தப்போட்டியை அடுத்து பிரிமியர் லீக் தொடர் புள்ளி பட்டியலில், கோல் வித்தியாசத்தில் அர்செனல் அணி முதலாவது இடத்திலும் லிவர்பூல் அணி 2 ஆவது இடத்திலும் மான்செஸ்டர் சிட்டி அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.