உக்ரைனின் சபோரிசியா அணு மின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், பாரிய அணு விபத்துக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா.வின் அணுமின் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
சபோரிசியா அணு மின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில் உக்ரைன் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
ஆறு உலைகளுடன் கூடிய மாபெரும் ரஷ்ய அணுமின் நிலையம் அமைந்துள்ள குறித்த பகுதியின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் பலதடவைகள் எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆலையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவு சாதாரணமாக இருப்பதாகவும், கடுமையான சேதம் எதுவும் இல்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யப் படைகள் 2022 ஆம் ஆண்டு முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபோரிசியா அணு மின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியிருந்த நிலையில் இரு தரப்பினராலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.