ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற மூன்று நாள் விவாதம் !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணங்க எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பும் அபாயகரமான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் குறித்தும் காலை 10:30 வரை விவாதம் நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை காலை 10.30 முதல் மாலை 5.30 வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று 25 ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் குறித்து விவாதம் நடைபெற்ற பின்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது.

தொடந்து 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடர்ந்து மூன்றாவது நாளாக காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.