கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைய முன்னர் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடக பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இது அவசியமான நடவடிக்கை என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடக பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கையில் பெரும் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நிதி இருப்பு, நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தமை பாராட்டத்தக்கவை என்றும் ஜூலி கோசாக் கூறியுள்ளார்.
நிதி மறுசீரமைப்பு நடவடிக்கைள் காரணமாக பொது நிதிகள் வலுப்பெற்றுள்ள போதும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடந்து வேகமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதிக்கு அங்கீகாரம் வழங்கியது.
இந்நிலையில் கடன் மறுசீரப்பு நடவடிக்கைக்காக சமபந்தப்பட்ட தரப்புக்களோடு இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.