மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளையும் சார்ந்துள்ளது

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரச அதிகாரிகளையும் சார்ந்துள்ளது என ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தொழிற்சங்கள் தொடர்பாடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல முக்கிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அந்த வேலைத்திட்டங்கள் இன்று செயற்படுத்தப்படுகின்றன. அதன்படி உறுமய, அஸ்வெசும , மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட மக்களுக்கு பெருமளவில் பலனளிக்கும் திட்டங்கள் குறித்து அனைவரையும் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்.

உறுமய வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். 20 இலட்சம் மக்கள் அதனால் பயனடைவர். வரலாற்றில் ஒருபோதும் இந்நாட்டில் இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. உறுமயவின் முதற்கட்டமாக 10,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கு விரைவில் காணி உறுதிகள் வழங்கப்படும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

இந்த மூன்று வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அவ்வாறு இல்லாமல் இந்த வேலைத் திட்டங்களை வெற்றகரமாகச் செயற்படுத்த முடியாது. மேலும், அது குறித்து மக்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய இந்தத் திட்டங்களை செயற்படுத்த அரசியல் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.

சமூர்த்தி திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 8000 ரூபாய் வரையில் பெற்றவர்கள் அஸ்வெசும திட்டத்தில் குறைந்த பட்ச நிவாரணமாக 15000 ரூபாய் வரை பெறுகின்றனர். பொருளாதார நெருக்கடியால், மக்கள் மத்தியில் வறுமை அதிகரித்தது. 05 இலட்சம் பேர் தொழிலை இழந்தனர். மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

ஆனால் அவற்றை தொடர்ச்சியாக வழங்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. இந்த வேலைத்திட்டங்களின் ஊடாக பொருளாதார ரீதியில் மக்களை வலுவூட்டுவதே அவரது நோக்கமாக உள்ளது. அதனால் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்ற நாம் இடைத் தரகர்களாகச் செயற்பட வேண்டும்.

அதன்படி மலைநாட்டு தசாப்தம் வேலைத்திட்டத்தை 10 மாவட்டங்களின் 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் தொடர்ச்சியாக 10 வருடங்கள் செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம், குடிநீர், சுகாதார பாதுகாப்பு, வீதி உள்ளிட்ட 10 விடயங்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களை சாத்தியப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்திருக்கிறது. தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவான இந்த வேலைத்திட்டங்களை வலுவாகச் செயற்படுத்தி மக்களுக்கு அதன் பிரதிபலன்களை வழங்க வேண்டும்.