நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமெனில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன, மத, மொழியை கடந்து ஒற்றுமையாக இணைந்து செயற்படும் போதே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் வட, கிழக்கு மக்களின் ஆணையில்லாமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என்பதால் தமக்கான ஆதரவை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு வழங்கினால் நீண்ட காலமாக இருக்கும் பிரிவினை அரசியலுக்கு முடிவு கட்ட முடியும் என்றும் சம உரிமைகளுடன் அனைவரும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடிய வகையில் ஆட்சியை ஏற்படுத்துவோம் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.