மக்களின் உரிமைகள் குறித்து சமூகம் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை பாடசாலைப் பாடத்திட்டத்தில் இருந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தையமுத்து தனராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு உள்ளிட்ட தரப்பினரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ள நிலையில் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து தேவையான மாற்றங்களை செய்து வருவதாக பேராசிரியர் தையமுத்து தனராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் மனித உரிமைகளை பாடமாக கற்பிப்பதன் மூலம் மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் பயனுள்ள பெறுபேறுகளை எட்ட முடியும் என பேராசிரியர் தனராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் ஏனைய தொழிலார்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் இடையே கற்பனை செய்ய முடியாத இடைவெளி இருப்பதாக தெரிவித்த பேராசிரியர் தனராஜ், தோட்டத் தொழிலாளர்களில் 90 விதமானோர் இன்னமும் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.