ஈஸ்டர் தாக்குதல் : நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி அடம்பிடிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தாம் வழங்கிய கருத்துகள் தொடர்பில் நீதிமன்றில் மீண்டும் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சி.ஐ.டி.யினருக்கு 5 மணிநேரங்களுக்கு நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டி தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்துள்ளார்.

250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த ஈஸ்டர் தாக்குதல்களின் பிண்ணனியில் யார் இருந்தார்கள் என்பது தனக்கு தெரியும் என 5 வருடங்களின் பின்னர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிடத் தயார் என்றும் அதே நேரத்தில், அந்தத் தகவல்களின் இரகசியத்தை பாதுகாப்பது நீதிபதிகளின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 25 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தைப் பெற்றது.

இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதியின் கருத்துகள் தொடர்பாக நாளைய தினம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் கடந்த 28 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.