பாடசாலை மட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் ஆசிரியர் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியில் அமைக்கப்பட்ட அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமை அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கை என ஆசியர் சங்கம் இந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.
கல்விச் செயற்பாடுகளில் தெல்லிப்பழை பொலிஸாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.