பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரிக்கும் திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க முன்மொழியப்பட்ட விதி, 36 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு அமைய மாலை ஐந்து மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதேவேளை, வங்கியியல் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இன்றய விவாதத்தில் பேசுவதற்கு அரச, எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாததால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் 4.30 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதினைந்து பேரின் பெயர்களையும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேரின் பெயர்களையும் கூறி அழைத்த போதிலும் அவர்கள் சபையில் இருக்கவில்லை.

இதனை அடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் விதியும் வங்கியியல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.