ஈஸ்டர் தாக்குதல்: தவறுதலாக கைது செய்தமைக்காக நீதிமன்றில் மன்னிப்புக் கோரிய பொலிஸார் அதிகாரிகள்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரிடம், ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளனர்.

6 மாதங்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, செனுல் அப்தீன் இர்பான், செனுல் அப்தீன் கலிபத்துல்லா, நூர்கே சகாரியா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்கள் துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்கே, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மீண்டும் விசாரணை நடத்தப்போவதில்லை என அறிவித்தனர்.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த அப்போதைய ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொஷான் சஞ்சீவ, பொலிஸ் சார்ஜன்ட் பிரேமரத்ன, சார்ஜன்ட் சிசிர, பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயதிலக ஆகியோர் திறந்த நீதிமன்றில் மன்னிப்பு கோரினர்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் கணக்கில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைமாறியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் மன்னிப்பு கோரிய போதும் இரண்டு சந்தேக நபர்கள் உடன்பாட்டுக்கு வர மறுத்ததால், வழக்கு செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.