யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய 61.5 மில்லியன் டொலரை மானியமாக வழங்கும் என இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி கிடைத்ததாக அமைச்சு கூறியுள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு புதிய பிரேக்வோட்டர் கட்டப்படும் (அலைகளிலிருந்து துறைமுகம் அல்லது கடற்கரையைப் பாதுகாப்பது) மேலும் ஆழமான கப்பல்களுக்கு இடமளிக்க துறைமுகம் 30 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும் என்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
மேலும் குறித்த கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க அவர்களின் முழு ஆதரவையும் இந்திய உயர் ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
இதேநேரம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 600 மில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்படும் புதிய முனையம் குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எடுத்துக்கூறினார்.
இந்த ஆண்டு பெப்ரவரியில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மலிவு விலையில் பயணக் கட்டண முறையை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பயணிகள் படகுகள் மூலம் இலங்கையிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு தற்போது விதிக்கப்படும் வரி 60 டொலர்களில் இருந்து 5 டொலர்களாக குறைக்கப்படும் அதேவேளை பயணிகள் கப்பல்கள் 60 டொலர்களில் இருந்து 20 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.