அரசியலமைப்பின் படி வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கு மேலதிகமாக 11 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபாயிற்கும் மேலதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்பதால், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கும்.பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஒருங்கிணைந்த நிதியில் இருந்து பணம் ஒதுக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
தற்போது, அரசாங்கத்தை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற ஆதரவை வழங்கி வரும் பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலை வலியுறுத்தி வருகின்றது. எவ்வாறாயினும், பொதுத் தேர்தலை நடாத்துவது தற்போதைய சூழலில் பொருத்தமற்றது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.