யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வு நடத்தியமை குறித்து விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
டிசம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற “தமிழ் வேள்வி-2023” எனும் நிகழ்வில், ஈழத்தமிழ் சமூகத்தில் இளைஞர் அமைப்புக்களின் எழுச்சி அவசியமா அல்லது தேவையற்றதா என கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் கருத்து தெரிவித்ததாகவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களை எழுச்சியூட்டும் வகையிலும் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பட்டிமன்றத்தை யாழ். பல்கலைக்கழகத்தில் நடத்த எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளுமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.