சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : 20ம் திகதி வாக்கெடுப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை மார்ச் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 20 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வாக்கெடுப்பை நடத்தவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக இம் மாதம் 44 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்தோடு எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ், சரித ஹேரத், வசந்த யாப்பா பண்டார, தேசிய மக்கள் சக்தி சார்பில் விஜித ஹேரத்தும் கையொப்பமிட்டனர்.

இணைய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது, நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணித்து சபாநாயகர் அதனை சான்றுப் படுத்தியமை அரசியலமைப்பை மீறும் செயல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.